2026 முதல் சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வுப் பொறுப்பு கணக்காய்வு அதிபரிடம்

 

சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிச் சங்கங்களின் கணக்காய்வுப் பணிகள், 2026 ஆம் ஆண்டு முதல் கணக்காய்வு அதிபருக்குப் புதிய பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற COPF குழுவின் கூட்டத்தின்போது இந்த தகவல் வெளியிடப்பட்டது.

இக்குழுவானது தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலைத்திட்டத்தையும் கவனத்தில் கொண்டது.

இந்தத் திட்டத்தின்படி, 2026 ஆம் ஆண்டில் மொத்தம் 3,508 கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இதில் 3,484 நிதி சார்ந்த கணக்காய்வுகள், 11 செயற்திறன் கணக்காய்வுகள், ஒரு சுற்றுச்சூழல் கணக்காய்வு மற்றும் 12 விசேட கணக்காய்வுகள் அடங்கும்.

இந்தநிலையில் சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வை மேற்கொள்வதற்குத் தேவையான ஊழியர் திறன் குறித்து COPF கவலைகளை எழுப்பியது.

இதற்குப் பதிலளித்த பதில் கணக்காய்வு அதிபர், தற்போதைய ஊழியர் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 10% முதல் 15% வரையான ஊழியர்கள் தேவைப்படுவார்கள் என்று கூறினார்.

மேலும், பிராந்திய அலுவலகங்கள் மூலம் ‘பைலட் கணக்காய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இவை பெப்ரவரி இறுதி வரை தொடரும் என்றும் அவர் குழுவிடம் தெரிவித்தார்.

இந்த பைலட் கணக்காய்வுகளுக்குப் பிறகு, ஆட்சேர்ப்பு மூலமாகவோ அல்லது வெளியாட்கள் மூலமாகவோ தேவையான சரியான ஊழியர் திறன் என்ன என்பது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.