
2026 இல் சிறுவர் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
2026 ஆம் ஆண்டில் “ஆரம்பத்திலிருந்தே சரியாகத் தொடங்குவோம்” எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, முன்பள்ளிக் கல்வி மற்றும் சிறுவர் அபிவிருத்தித் துறையில் பௌதீக ரீதியிலான, கொள்கை ரீதியிலான மற்றும் ஒழுக்க விழுமிய ரீதியிலான வளர்ச்சியை ஏற்படுத்துவதே எமது பிரதான இலக்காகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை 2026 புத்தாண்டை வரவேற்பதற்கும், புதிய ஆண்டின் கடமைகளை ஆரம்பிப்பதற்கும் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டில் முறையான நிதி ஒழுக்கத்தைப் பேணி, உற்பத்தி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, இலங்கையை பொருளாதார குறிகாட்டிகளில் உயர்த்திச் செல்லும் அதேவேளை, அதற்கு இணையாக சமூக அபிவிருத்தி குறிகாட்டிகளிலும் இலங்கையை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்ரமசிங்க, மேலதிக செயலாளர்கள் மற்றும் அனைத்துப் பிரிவுத் தலைவர்கள் உட்பட அமைச்சின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
