20 அடி பள்ளத்தில் லொறி கவிழ்ந்து விபத்து : இருவர் படுகாயம்!
-நுவரெலியா நிருபர்-
வட்டவளை பகுதியில், லொறியொன்று வீதியை விட்டு விலகி வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த லொறி, பிரதான வீதியை விட்டு விலகி, 20 அடி பள்ளத்தில் விழுந்ததில் லொறியில் பயணித்த சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஆரம்ப சிகிச்சையின் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக, வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் சந்தன கமகே மஹாகா தெரிவித்தார்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இன்று சனிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கிச் சென்ற லொறி, எதிர் திசையில் சென்ற லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி ஏற்படவிருந்த விபத்தைத் தவிர்க்க முயன்றபோது, குறித்த லொறி பிரதான வீதியை விட்டு விலகிச் சென்றதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையில், கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த ஒரு பயணி ஒருவர், குறித்த விபத்தைப் பார்க்க சென்று, மீண்டும் பேருந்தில் ஏற முயன்றபோது பயணி தவறி விழுந்து பேருந்தின் முன் சக்கரத்தின் கீழ் அவரது கால் சிக்கிக் கொண்டுள்ளது.
இதனால் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு, நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்று வட்டவலை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில், வட்டவளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
