1,700 ரூபாவை வழங்க முடியாது : முதலாளிமார் சம்மேளனம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை அறிவித்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தீர்மானிப்பதற்காக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இன்று வியாழக்கிழமை கூடவுள்ளது.
தற்போதைய காலப்பகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியமாக 1,700 ரூபாவை வழங்குவதற்கான இயலுமை இல்லை என முதலாளிமார் சம்மேளன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுவதா? இல்லையா? என்பது குறித்து இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தின் போதுஇ தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கடந்த 30ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெருந்தோட்டத் தேயிலை மற்றும் இறப்பர் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியத்தை அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரைக்கமைய தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ. ஜயசுந்தரவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய நாளாந்த குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், நாளாந்த விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பெருந்தோட்டத் தேயிலை தொழிலாளர்களுக்கான நாளாந்த மொத்த கொடுப்பனவு 1,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலதிக தேயிலை கிலோவொன்றுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்