17 இந்திய மீனவர்களையும் விடுவிக்க கோரி உணவுத்தவிர்ப்பு போராட்டம்!
-மன்னார் நிருபர்-
எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 17 இந்திய மீனவர்களையும் உடனடியாக விடுவிக்கக் கோரி தங்கச்சி மடத்தில் இன்று வியாழக்கிழமை உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்கச்சிமட மீனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மீனவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 28ஆம் திகதி 17 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது அவர்களின் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை, இலங்கை சிறைகளில் உள்ள 162 மீனவர்களை, அவர்களின் படகுகளுடன் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி எதிர்வரும் 8ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்