நாட்டில் குறைந்த மக்கள் தொகை முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவு!

இலங்கையின் 15-வது மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இது தொடர்பான தகவல்களைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது.

இக்கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,781,800 ஆகப் பதிவாகியுள்ளது. நாடு தழுவிய ரீதியில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 350 பேர் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாகாண மற்றும் மாவட்ட ரீதியான விபரங்கள்

மொத்த மக்கள் தொகையில் 28.1% மேல் மாகாணத்தில் வசிக்கின்றனர். இதுவே நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாகத் தொடர்கிறது.

மாவட்ட ரீதியாக அதிகப்படியான மக்கள் தொகை கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதன் மக்கள் தொகை 2,436,142 ஆகும்.

குறைந்தப்பட்ச மக்கள் தொகை முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதன் எண்ணிக்கை 122,619 ஆகும்.

வயது மற்றும் பாலின விகிதம்

2024-ஆம் ஆண்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் சதவீதம் மொத்த மக்கள் தொகையில் 18.0% ஆகக் காணப்படுகிறது.

சிறுவர்களின் சதவீதம் 20.7% ஆகக் குறைவடைந்துள்ளது.

நாட்டின் நடுத்தர வயது (Median Age) 35 ஆக அதிகரித்துள்ளது. இது 2012-ஆம் ஆண்டு கணக்கெடுப்பை விட 5 ஆண்டுகள் அதிகமாகும்.

பாலின விகிதத்தைப் பொறுத்தவரை, தேசிய மட்டத்தில் 100 பெண்களுக்கு 93.1 ஆண்கள் என்ற விகிதம் காணப்படுகிறது. இது 2012-இல் இருந்த 93.8-ஐ விடக் குறைவானதாகும்.

திருமண நிலை குறித்த தகவல்கள்

மொத்த மக்கள் தொகையில் 41.8% பேர் ஒருபோதும் திருமணம் செய்யாதவர்கள். 2012-ஆம் ஆண்டில் இந்த அளவு 30% ஆக மட்டுமே இருந்தது.

திருமண வயதும் அதிகரித்துள்ளது. ஆண்களின் சராசரி திருமண வயது 29.2 ஆகவும், பெண்களின் சராசரி திருமண வயது 25.6 ஆகவும் உயர்ந்துள்ளது. (2012-இல் இது முறையே 27.2 மற்றும் 23.4 ஆக இருந்தது).

விதவைத் தன்மை (Widowhood) 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகரித்துள்ளது. பெண்களிடையே இது 44.2% ஆகவும், ஆண்களிடையே 10.5% ஆகவும் உயர்ந்துள்ளது. (2012-இல் இது பெண்களிடையே 38.4% ஆகவும், ஆண்களிடையே 8.6% ஆகவும் இருந்தது).

இனத்துவ மற்றும் மத ரீதியான விபரங்கள்

2024 மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இனங்கள் மற்றும் மதங்கள் தொடர்பான பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கையின் இன ரீதியான பரம்பலைக் கருத்தில் கொள்ளும்போது, மிகப்பெரிய இனக்குழுவாக சிங்கள இனத்தவர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 16,144,037 ஆகும், இது மொத்த மக்கள் தொகையில் 74.12% ஆகும் எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய முக்கிய இனக்குழுக்களின் விபரங்கள் வருமாறு

இலங்கைத் தமிழர்: 2,681,627 (12.31%)
இலங்கைச் சோனகர் (முஸ்லிம்): 2,283,246 (10.47%)
இந்தியத் தமிழர் (மலையகத் தமிழர்): 600,360 (2.76%)

ஏனைய இனக்குழுக்களில்
பரங்கியர் (Burger) 31,721 பேர்
மலாயர் (Malay) 26,650 பேர்
இலங்கைச் செட்டி (Sri Lankan Chetty) 2,443 பேர்
பாரத (Bharatha) 1,183 பேர்
வேடுவச் சமூகம் (Vedda) 1,373 பேர்
இவை தவிர ‘ஏனையவை’ என வகைப்படுத்தப்பட்டோர் 9,160 பேர் ஆவர்.

மாகாண ரீதியான இனப்பரம்பல்

சிங்கள மக்கள்: தென் மாகாணம் (94.8%), வடமத்திய மாகாணம் (90.5%), சபரகமுவ (86.5%), வடமேல் மாகாணம் (84.8%) மற்றும் மேல் மாகாணம் (83.6%) ஆகியவற்றில் அதிக சதவீதத்தில் வாழ்கின்றனர்.

இலங்கைத் தமிழர்: வட மாகாணத்தில் பெரும்பான்மையாக 91.5% வசிக்கின்றனர்.

இலங்கைச் சோனகர் (முஸ்லிம்): கிழக்கு மாகாணத்தில் அதிகபட்சமாக 39.5% வசிக்கின்றனர்.

இந்தியத் தமிழர்: பிரதானமாக மத்திய மாகாணத்தில் 15% செறிந்து வாழ்கின்றனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத ரீதியான கட்டமைப்பு

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் மத ரீதியான வகைப்படுத்தல் வருமாறு:

பௌத்தர்கள்: 69.8%
இந்துக்கள்: 12.6%
இஸ்லாமியர்கள்: 10.7%
ரோமன் கத்தோலிக்கர்கள்: 5.6%
ஏனைய கிறிஸ்தவர்கள்: 1.3%

கல்வி மற்றும் எழுத்தறிவு

2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ஆம் ஆண்டளவில் இலங்கையின் கல்வி மட்டம் மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

குறிப்பாக, உயர்கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதோடு, இளைஞர்கள் மத்தியில் டிஜிட்டல் எழுத்தறிவு (Digital Literacy) வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.

25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் பெரும்பாலானோர் (58.4%) இரண்டாம் நிலைக் கல்வியைப் (Secondary Education) பூர்த்தி செய்துள்ளனர்.

இது இரு பாலினத்தவருக்கும் பொதுவான பண்பாகக் காணப்பட்டாலும், மூன்றாம் நிலைக் கல்வியில் (Tertiary Education) ஆண்களை விட பெண்களின் சதவீதம் உயர்வாகக் காணப்படுவதாக அறிக்கை குறிப்பிடுகின்றது.

2012 கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது, பாடசாலை செல்லாதவர்கள் அல்லது ஆரம்பக் கல்வியை மட்டும் பெற்றவர்களின் எண்ணிக்கை 2024 இல் கணிசமாகக் குறைந்துள்ளது. 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 6,690,333 பேர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (O/L) அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிகளைப் பெற்றுள்ளனர்.

மூன்றாம் நிலைக் கல்வியைத் தனது உயர்ந்த கல்வித் தகுதியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2012 இல் காணப்பட்ட 18.2% இலிருந்து 26.2% ஆக அதிகரித்துள்ளது. இதிலும் ஆண்களை விடப் பெண்களின் முன்னேற்றம் மிகத் தெளிவாகத் தெரிகின்றது.

ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் கணினி எழுத்தறிவு (Computer Literacy) 34.7% ஆகவும், டிஜிட்டல் எழுத்தறிவு 67.6% என்ற உயர் மட்டத்திலும் உள்ளது. 20-24 வயதுப் பிரிவினர் அதிக கணினி எழுத்தறிவைப் பெற்றுள்ளதோடு, 15-19 வயதுப் பிரிவினர் டிஜிட்டல் எழுத்தறிவில் முன்னிலையில் உள்ளனர்.

மேலும், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளில் கூட 15% இற்கும் அதிகமானோர் டிஜிட்டல் எழுத்தறிவைக் கொண்டுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி மற்றும் வாழ்க்கைத்தரம்

2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வீடுகளின் தரம், சுகாதார வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அணுகல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை காட்டுகின்றது. குறிப்பாக, மின்சாரம் மற்றும் எரிவாயு (Gas) பயன்பாடு அதிகரித்துள்ளதோடு, மண்ணெண்ணெய் மற்றும் விறகு பயன்பாடு படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.

வீட்டு அலகுகள் மற்றும் உரிமை

2024 ஆம் ஆண்டளவில் நாட்டில் வசிப்பிடங்களைக் கொண்ட வீட்டு அலகுகளின் எண்ணிக்கை 6,030,541 ஆகும். இது 2012 உடன் ஒப்பிடுகையில் 822,801 அலகுகளின் வளர்ச்சியாகும்.

அதிகளவிலான வீட்டு அலகுகள் கிராமப்புறங்களில் பதிவாகியுள்ளன. மாவட்ட ரீதியாக அதிக வீடுகள் கம்பஹா மாவட்டத்திலும், குறைந்த வீடுகள் மன்னார் மாவட்டத்திலும் பதிவாகியுள்ளன.

இலங்கையில் பெரும்பாலானவை தனி வீடுகளாகும், அவற்றில் 82.2% ஒற்றை மாடி வீடுகளாகும்.

நாட்டின் 84.69% வீடுகளின் உரிமை அந்த வீடுகளில் வசிப்பவர்களிடமே உள்ளது என்பது ஒரு விசேட அம்சமாகும்.

தனிமையில் வசிக்கும் சிரேஷ்ட பிரஜைகள்

நாட்டின் மொத்த வீட்டு அலகுகளில் 10.5% வீடுகளில் தனிநபர்களே வசிக்கின்றனர். அதன்படி, 640,704 பேர் தனிமையில் வசிக்கின்றனர். இவர்களில் 370,229 பேர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் ஆவர்.

இவ்வாறு தனிமையில் வசிக்கும் முதியவர்களில் பெரும்பாலானோர் (71.3%) பெண்கள் என அறிக்கை வெளிப்படுத்துகின்றது.

வசதிகள் மற்றும் எரிசக்தி பயன்பாடு

92.2% வீடுகள் தமது வீட்டிற்குள்ளேயே அல்லது வளவினுள்ளேயே குடிநீர் வசதியைப் பெற்றுள்ளன.

தேசிய மின்சாரக் கட்டமைப்பின் மூலம் மின்சாரம் பெறும் வீடுகளின் எண்ணிக்கை 2012 இல் காணப்பட்ட 87.0% இலிருந்து 98.0% ஆக உயர்ந்துள்ளது. மண்ணெண்ணெய் பயன்பாடு 1.6% ஆகக் குறைந்துள்ளது.

சமையலுக்காக 55.4% வீடுகள் விறகையும், 42.4% வீடுகள் எரிவாயுவையும் பயன்படுத்துகின்றன.

62% வீடுகளில் வீட்டிற்குள்ளேயே சுகாதார வசதிகள் (கழிவறை) உள்ளன. அத்துடன் 99.6% வீடுகள் நீர் முத்திரை இடப்பட்ட (Water seal) கழிப்பறைகளையே பயன்படுத்துகின்றன.

நாட்டில் 93.8% வீடுகளில் மொபைல் போன் (Mobile Phone) பயன்பாடு உள்ளதாக அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.

சுகாதாரம் மற்றும் ஊனமுற்ற நிலை

இலங்கையின் சுகாதாரத் துறையில் தொற்றாத நோய்களின் (Non-Communicable Diseases) பரவல் ஒரு முக்கிய சவாலாகத் தொடர்வதை அண்மைக்கால தரவு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

அந்த அறிக்கையின்படி, 3,223,413 நபர்கள் பல்வேறு மட்டத்திலான செயற்பாட்டு ரீதியான சிரமங்களை (Functional Difficulties) எதிர்நோக்குவதாகப் பதிவாகியுள்ளது. இது மக்கள் தொகையில் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 35 பேர் என்ற விகிதமாகும்.

2024 ஆம் ஆண்டு தரவுகளின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 19.2% (4.187 மில்லியன் நபர்கள்) தொற்றாத நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுய விபரப் பதிவுகளின்படி (Self-reported), அதிகளவான நோயாளர்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களினாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கை வெளிப்படுத்துகின்றது.

இவ்வாறான நோய்த்தாக்கங்கள் பிரதானமாகப் பெண்கள் மற்றும் முதியவர்கள் மத்தியிலேயே அதிகம் பதிவாகியுள்ளன. குறிப்பாக, 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் பாதியிற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு நீண்டகால (Chronic) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

கல்வி மட்டம் அதிகரிக்கும் போது, தொற்றாத நோய்கள் பதிவாகும் விகிதம் படிப்படியாகக் குறைவடைவதை தரவுகள் காட்டுகின்றன. இதன் மூலம் சமூகத்தில் ‘சுகாதார எழுத்தறிவு’ (Health Literacy) இடைவெளி ஒன்று காணப்படுவது புலனாகின்றது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடப்பெயர்வு (Migration)

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 13% பேர் தங்களது பிறந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் வசிக்கும் ‘வாழ்நாள் இடப்பெயர்ந்தோர்’ (Lifetime Migrants) என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

அதிகாரப்பூர்வ இடப்பெயர்வு தரவுகள்

அதிகப்படியான நிகர இடப்பெயர்வைக் (Net Migration) கொண்ட மாவட்டங்களாக கம்பஹா (357,528) மற்றும் கொழும்பு (191,524) பதிவாகியுள்ளன. தற்போது இடப்பெயர்வாளர்களின் முதன்மையான இலக்காக கம்பஹா மாவட்டம் மாறியுள்ளது.

கண்டி, மாத்தறை, நுவரெலியா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலிருந்து மக்கள் அதிகளவில் வெளிமாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்திற்குள் இடம்பெயர்வோரின் எண்ணிக்கையும், அங்கிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கையும் சம அளவில் காணப்படுகின்றன.

வட மாகாணத்தின் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் நேர்மறையான (Positive) வாழ்நாள் இடப்பெயர்வு முறையைக் காட்டுகின்றன.

முந்தைய வசிப்பிடங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 0.5 மில்லியனுக்கும் அதிகமான இடப்பெயர்வாளர்கள் பதிவாகியுள்ளனர்.

வெளியேற்றம் மற்றும் உள்வருகை

கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளியேறுவோரின் விகிதமும் உயர் மட்டத்தில் உள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தே மிகக் குறைந்த அளவிலான மக்கள் வெளியே இடம்பெயர்ந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவிலான உள்வரும் இடப்பெயர்வு (In-migration) பதிவாகியுள்ளது.

வெளிநாட்டுப் பயணம்

தற்காலிகமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள வீட்டு அலகுகளைச் சார்ந்த நபர்களின் எண்ணிக்கை 672,249 ஆகும். இந்தத் தொகையில் பெரும்பான்மையானோர், அதாவது 61.3% பேர் ஆண்கள் என அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்படை மற்றும் வேலைவாய்ப்பு

இலங்கையின் தொழிற்படையில் ஆண்களின் பங்களிப்பு முதன்மையாகக் காணப்படுவதோடு, பெண்களின் பங்களிப்பு தொடர்ந்தும் குறைந்த மட்டத்திலேயே உள்ளதாகப் புதிய தரவு அறிக்கை காட்டுகின்றது.

2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வேலைவாய்ப்பில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், இளைஞர் விபரம் ஒரு முக்கிய பிரச்சினையாக நீடிக்கின்றது.

தொழிற்படை பங்களிப்பு

நாட்டின் ஒட்டுமொத்த தொழிற்படை பங்களிப்பு விகிதம் 47.3% ஆகும். இதில் ஆண்களின் பங்களிப்பு 67.4% என்ற உயர் மட்டத்திலும், பெண்களின் பங்களிப்பு 28.9% என்ற மிகக் குறைந்த மட்டத்திலும் காணப்படுகின்றது.

பொருளாதார ரீதியாகச் சுறுசுறுப்பான (Economically Active) மக்கள் தொகையில் 68% பேர் ஆண்கள் ஆவர். பொருளாதார ரீதியாகச் சுறுசுறுப்பற்ற மக்கள் தொகையில் 70.6% பேர் பெண்கள் என அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

வேலைவாய்ப்பு மற்றும் விபரம்

நாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 7.68 மில்லியன் ஆகும். இவர்களில் 69.3% பேர் ஆண்கள். ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் (Unemployment Rate) 6% ஆகப் பதிவாகியுள்ளது.

அதிகப்படியான வேலையின்மை 20-24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் மத்தியிலேயே காணப்படுகின்றது. பொதுவான வேலைவாய்ப்பு விகிதம் 94% ஆகவும், வேலையின்மை விகிதம் 6% ஆகவும் உள்ளது.

பொருளாதார ரீதியாகச் சுறுசுறுப்பற்ற நிலை

உழைக்கும் வயதில் உள்ள மக்கள் தொகையில் 52% பேர் பொருளாதார ரீதியாகச் சுறுசுறுப்பற்றவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்குப் பிரதான காரணங்களாக வீட்டுப் பொறுப்புகள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் முதுமை ஆகியவை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.