
15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்யவுள்ள நாடுகள்!
15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கும், உயர்நிலைப் பாடசாலைகளில் (Senior Schools) தொலைபேசி பயன்பாட்டைத் தடை செய்வதற்குமான சட்டமூலத்திற்கு பிரான்ஸ் நாட்டின் தேசிய சபை (National Assembly) ஆதரவு அளித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் தற்போது அடுத்தகட்டமாக செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, டிஜிட்டல் ஊடகங்களின் ஆதிக்கத்திலிருந்து சிறுவர், சிறுமிகளைப் பாதுகாக்கும் நோக்கில், சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த புதிய சட்டத்தைக் கொண்டுவர எகிப்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின்படி, எகிப்தில் உள்ள 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.
இவர்கள் மிக எளிதாக இணையவழி மோசடிகள் மற்றும் தேவையற்ற இணைய அபாயங்களில் சிக்குவது தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்கள் போதிய முதிர்ச்சியை அடையும் வரை அவர்களை சமூக வலைத்தளப் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பத்தாஹ் அல் சிசி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான சட்டக் கட்டமைப்புகளை உருவாக்குமாறு அவர் அண்மையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, எகிப்திய அரசு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம், அந்நாட்டு நாடாளுமன்றம், சிறுவர் நல அமைப்புடன் இணைந்து இது குறித்து ஆய்வு மேற் கொண்டு விரைவில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கும், பிரித்தானியாவில் 15 வயதுக்குட்பட்டோருக்கும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நாடுகளின் சட்டதிட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டே எகிப்திலும் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
