15 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையானது சுப்பர்மேன் அறிமுகமான அரிய வகை சித்திரக்கதை

உலகின் முதல் சுப்பர்மேன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய 1938 ஆம் ஆண்டு வெளியான ‘Action Comics No 1’ சித்திரக்கதையின் அரிய பிரதி ஒன்று, 15 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது.

தனியார் விற்பனை மூலம் நடைபெற்றுள்ள இந்தச் கொடுக்கல் வாங்கலை நியூயோர்க்கை தளமாகக் கொண்ட ‘Metropolis Collectibles/Comic Connect’ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த நவம்பர் மாதம் சுப்பர்மேன் சித்திரக்கதை ஒன்று 9.12 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையானதே சாதனையாக இருந்தது.

1938 ஆம் ஆண்டில் வெறும் 10 சதம் என்ற விலைக்கு விற்கப்பட்ட இந்தச் சித்திரக்கதை, தற்போது பல மில்லியன் டொலர்கள் பெறுமதியைப் பெற்றுள்ளது.

இந்தக் குறிப்பிட்ட சித்திரக்கதை பிரதிக்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது.

இதனை ஹொலிவுட் நட்சத்திரம் நிகோலஸ் கேஜ் (Nicolas Cage) 1996 ஆம் ஆண்டில் 150,000 டொலர்களுக்கு வாங்கியிருந்தார்.

இருப்பினும், 2000ஆம் ஆண்டு அவரது வீட்டில் நடைபெற்ற விருந்து ஒன்றின் போது இது திருடப்பட்டது.

11 ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள களஞ்சிய அறை ஒன்றில் இது மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட ஆறு மாதங்களில் நிகோலஸ் கேஜ் இதனை 2.2 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்திருந்தார். தற்போது அதன் மதிப்பு 15 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

சுப்பர் ஹீரோ வகையிலான கதைகளுக்கு வித்திட்ட பெருமை இந்த ‘Action Comics No 1’ பிரதியையே சாரும். உலகில் தற்போது இதன் 100க்கும் குறைவான பிரதிகளே எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகிறது.

10 புள்ளி மதிப்பீட்டில் 9 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்தப் பிரதி, இதுவரை கண்டறியப்பட்டவற்றில் மிகவும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்ட பிரதியாகக் கருதப்படுகிறது. இந்த விற்பனையை மேற்கொண்ட நிறுவனம், சித்திரக்கதையின் பழைய உரிமையாளர் மற்றும் புதிய கொள்வனவாளர் ஆகிய இருவருமே தமது விபரங்களை இரகசியமாக வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.