15 மாத குழந்தைக்கு பராமரிப்பாளர் செய்த கொடூர செயல்!

இந்தியா உத்தர பிரதேஷ் – நொய்டா பகுதியில் உள்ள பகல் ​நேர குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் அதன் பராமரிப்பாளரால் 15 மாத குழந்தை ஒன்று, கடுமையாக தாக்கப்படும் சம்பவம் ஒன்று பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவின் 137 ஆம் பிரிவில் வசிக்கும் பெற்றோர், தொழில் நிமித்தம் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால், தமது 15 மாத குழந்தையை பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் சேர்ப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.

அதன்படி கடந்த மே மாதம் 21ஆம் திகதி பராமரிப்பு நிலையத்தில் அந்த குழந்தையை சேர்த்துள்ளனர்.

குழந்தையை இரண்டு மணி நேரம் பராமரிப்பதற்கு அந்த பராமரிப்பு நிலையத்தினால் 2500 ரூபாய் கட்டணம் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2ஆம் திகதி குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெற்றோர், குழந்தையின் தொடை பகுதியில் சிவப்பு நிற அடையாளம் இருந்ததை அவதானித்துள்ளனர்.

ஏதேனும் ஒவ்வாமை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்த பெற்றோர், குழந்தையை வைத்தியரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் குழந்தையை பரிசோதித்த வைத்தியர், சிவப்பு நிற அடையாளம் பற்களால் கடித்தமையினால் ஏற்பட்டுள்ளமை என்பதை உறுதிப்படுத்தினார்.

அதன்பின்னர் குறித்த பராமரிப்பு நிலையத்திற்கு விரைந்த பெற்றோர், அங்குள்ள சீசீரீவி காட்சிகளை கோரியுள்ளனர்.

அதனை பார்த்த பெற்றோருக்கும், அங்கு பணியாற்றிய ஏனையோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் பராமரிப்பாளராக இருக்கும் பெண், அழும் குழந்தையின் தலையை சுவரில் மோதுவதையும், கால்களில் கடிப்பதையும், பின்னர் நிலத்தை நோக்கி குழந்தையை உயரத்தில் இருந்து போடுவதையும் அவதானித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்த நிலையில், சந்தேகநபரான பெண்ணை பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீசீரீவி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, தமக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதியில் உள்ள பல பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அவர்களும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கவுள்ளதாக கூறியதுடன், குறித்த குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரை கைது செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நொய்டா பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சந்தேகநபரான பெண் 18 வயதுக்கு குறைந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் அனுபவமிக்க சிரேஸ்ட பெண் ஒருவரை பணியமர்த்தாமல், சிறுமி ஒருவரை பணிக்கு அமர்த்தியுள்ளமை அந்த பகுதி மக்களை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.