15 பில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் சுங்க திணைக்களத்தினால் அழிப்பு!

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் அழிக்கப்படவுள்ளது.

கெரவலப்பிட்டியவில் உள்ள களஞ்சியசாலையொன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட குறித்த சிகரெட்டுகளின் பெறுமதி ரூ.15 பில்லியன் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் 200 மில்லியன் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவை 2021ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுங்கத்துறை அரசாங்கத்திற்கு 13 கோடி ரூபாயை சேமிக்க உதவியமைக்காகவும் இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

‘இந்த சிகரெட்டுகளை விற்க முடியாது, ஏனெனில் அதன் தரத்தை யாரும் உறுதிப்படுத்த முடியாது. திறக்கப்பட்ட சிகரெட் பெட்டிகளில் முற்றிலும் மங்கிப்போன சிகரெட்டுகள் உள்ளன. இதனால்தான் இவற்றை அழிக்க முடிவு செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 3 நிறுவனங்களினால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுக்கு தலா 25 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.