15பேரை காவு கொண்ட எல்ல விபத்துக்கு இது தான் காரணமாம் – டி.ஐ.ஜியின் கருத்து

எல்ல-வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற விபத்து பேருந்து சாரதியின் அலட்சியத்தால் ஏற்பட்டதாக போக்குவரத்துப் பிரிவு டி.ஐ.ஜி இந்திக ஹபுகொட தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசாரணை குறித்து தனது கருத்துக்களைத் தெரிவிக்கும்போதே போக்குவரத்துப் பிரிவின் துணைப் பொது ஆய்வாளர் டி.ஐ.ஜி இந்திக ஹபுகொட இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பேருந்தை சாரதியினால் கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையிலேயே அது பாதையை விட்டு விலகிச் சென்றமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.

கடந்த 4 ஆம் திகதி இரவு, தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த எல்ல-வெல்லவாய பிரதான வீதியிலுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து பல வழிகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.