14 வயது சிறுவன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு : சிறுவனின் தந்தை கைது!

நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை பகுதியில், 14 வயது சிறுவன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு, நூரியாவத்தை பிரிவு 02 இல் உள்ள வீடொன்றில், சிறுவன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கு தாக்குதலுக்கு உள்ளாகிய சிறுவனை மீட்டு, உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூரியாவத்த, பிரிவு 02 இல் வசிக்கும், 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால், சிறுவனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுவனின் தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.