14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் மக்கள் ஆர்ப்பாட்டம்!

-நுவரெலியா நிருபர்-

ஹட்டன் – ஷெனன் பகுதியில் தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பின்மையினால் 14 மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்ததாகக் கூறி, உயிரிழந்த குழந்தையின் உடலத்துடன் பொதுமக்கள் நேற்று திங்கட்கிழமை மாலை வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த இந்த 14 மாத குழந்தை கடந்த 15 ஆம் திகதி திடீர் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, குழந்தையைத் தோட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அங்கு வைத்தியர் இல்லாதமையினால், குழந்தையை டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்குத் தோட்ட நிர்வாகத்திடம் போக்குவரத்து உதவி கோரப்பட்டது.

எனினும், ஓட்டுநர் இல்லாதமையினால் வாகனமொன்றை வழங்குவதற்குத் தோட்ட நிர்வாகம் மறுத்ததால், தனியார் வாகனமொன்றில் குழந்தை டிக்கோயா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் முன்னதாகவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தோட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தின் விளைவாகவே, இந்த மரணம் சம்பவித்ததாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஷெனன் தோட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப்பட்டது

இதேவேளை, குழந்தையின் பிரேதப் பரிசோதனை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டது.

இதன்படி, தொண்டையில் பால் புரைக்கேறி மூச்சுத் திணறியமையினாலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, தோட்ட நிர்வாகத்திடம் விசாரிக்க முயன்றபோதிலும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை