
11 வருட திருமண வாழ்க்கையை முடித்து வைத்த பூண்டு மற்றும் வெங்காயம்!
குஜராத்தின் – அகமதாபாத்தில், உணவில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, 11 ஆண்டுகால திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துள்ளது.
அகமதாபாத்தில், 2002ல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு ஆரம்பத்தில் உணவுப் பழக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.
சுவாமி நாராயணின் தீவிர பக்தையாக மாறிய மனைவி, மத நம்பிக்கை காரணமாக உணவில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவதைத் தவிர்த்தார்.
அதே சமயம், கணவரும், அவரது தாயாரும் அவற்றைப் பயன்படுத்தினர்.
இது தொடர்பாக, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, தனித்தனியாக உணவு தயாரிக்கப்பட்டது. எனினும் இது தொடர்பில் பிரச்சினைகள் தொடர்ந்த நிலையில், அதிருப்தி அடைந்த மனைவி, குழந்தையுடன் தன் அம்மா வீட்டுக்குச் சென்றார்.
மன உளைச்சலுக்கு ஆளான கணவர், விவாகரத்து கோரி அகமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் 2013 இல் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், ‘உணவுப் பழக்க வழக்கங்களில் மனைவி சமரசம் செய்யவில்லை. இது கொடுமைப்படுத்துவதற்கு சமம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். குறித்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. மேலும், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கவும் கணவருக்கு உத்தரவிட்டது.
விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத மனைவி, மத உணர்வை கணவர் புண்படுத்தி விட்டதாகக் கூறி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அப்போது, பூண்டு, வெங்காயம் இல்லாமல் சமைத்த போதும் மனைவி வேண்டுமென்றே பிரச்சினை செய்தார் எனவும், இது தொடர்பாக மகளிர் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் கணவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, விவாகரத்தை எதிர்க்கவில்லை என மனைவி தெரிவிக்கவே, அவரது மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையை தவணை முறையில் நீதி மன்றத்தில் செலுத்தும்படி கணவருக்கு உத்தரவிட்டது.
பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவது தொடர்பான சிறிய பிரச்சினை, 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள தகவல் இந்திய ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
