1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைக்குள் உள்வாங்கினால் மாகாணத்தின் அதிகாரங்கள் குறையும்

-கிரான் நிருபர்-

ஆயிரம் பாடசாலைகளை மாகாண மட்டத்தில் இருந்து தேசிய பாடசாலைக்கு உள் வாங்கினால் அந்த மாகாணத்தின் அதிகாரங்கள் குறையும், அதே நேரம் ஆயிரம் பாடசாலைகள் கல்வி அமைச்சுக்குள் வந்து விட்டால் அந்த சுமையினை கல்வி அமைச்சினால் ஏற்க முடியாது,  என கல்வி இராஜங்க அமைச்சர் எ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

கல்குடா கல்வி வலயத்தின் வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வு கல்லூரி அதிபர் சி.அரசரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற போது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1000 பாடசாலை திட்டததின் கீழ் உள் வாங்கப்பட்ட ஒரு பாடசாலையேனும்  இந்த 396 தேசிய பாடசாலைக்கு புறம்பாக தரம் உயர்த்த படமாட்டாது அவை அனைத்தும் மாகாண பாடசாலையகவே இயங்கி கொண்டு இருக்கும்.

நான் பாடசாலை நிகழ்வுகளில் அரசியல் பேச கூடாது என்றுதான் இருந்தேன் பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம் அவர்கள் 13 ஆவது அரசியல் அமைப்பின் மாகாண சபை தொடர்பான சில விடயங்களை தொட்டதினால் நான் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் அதற்கான பதில் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.

உண்மையில் மாகாண சபையினை பொறுத்த வரையில் மாகாண சபைக்கு அதிக அதிகாரத்தினை வழங்க வேண்டும் என்பதில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் என்பதை நான் தனிப்பட்ட வகையில் அறிவேன் அவ்வாறு மாகாணங்களுக்கு அதிகாரத்தினை வழங்கி 13ம் திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனும் எண்ணத்தில் அவர் உள்ளார்.

மாகாண சபை சட்டம் 1987 ல் கொண்டு வரப்பட்டாலும் 1988ல்தான் அது முழு வடிவம் பெற்றது. மாகாணசபை கொண்டு வரப்பட்டதன் நோக்கம் வடக்கு கிழக்கில் உள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதனால் தான் கொண்டு வரப்பட்டது.

அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு சிங்கள மக்களையும் திருப்தி படுத்த வேண்டிய தேவையும் அவசியமும் இருந்தமை காரணமாக வட கிழக்குக்கு மட்டும் மட்டுபடுத்தாமல் முழு நாட்டுக்குமாக ஒன்பது மாகாண சபைகளை ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்தது ஆகவே ஒன்பது மாகாண சபைகள் உருவாக்க பட்டது.

இன்றும்கூட அவர்களிடையே  சிலர் மாகாண சபை முறையை தேவையில்லை என்பதினை நான் தனிப்பட்ட ரீதியில் அறிவேன் .

1988 ல் எப்படி மாகாண சபைகள் இயங்க ஆரம்பித்ததோ இன்று அதைவிட அதிகாரங்கள் இருப்பதை பார்க்க கூடியதாக உள்ளது

அதேவேளை பல வருடங்களாக மாகாண சபைகள் இயங்கவில்லை பாரிய வெற்றிடங்கள் அப்படி இயங்கி இருந்தால் இன்று அதிக அதிகாரம் கொண்ட மாகாண சபையாக இயங்கி இருக்கும்.

இன்றும் கூட பாராளுமன்றத்தில் சில சட்டங்களை இயற்றும்போது ஒன்பது மாகாண சபைகளின் ஒப்புதல் இல்லாமல் சட்டங்களை இயற்ற முடியாமல் உள்ளது இதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.