10 கோடி ரூபாய் ‘அம்பர்’ மீட்பு

கற்பிட்டி, கண்டல்களி பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை அம்பர் ( திமிங்கலத்தின் வாந்தி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வன்னாத்தவில்லு பொலிஸ் விஷேட பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட அம்பர், கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டல்குழி மீனவர்களால் அதனை மீட்டு, படகு ஒன்றில் கொண்டுவரப்பட்டு, அதை விற்பனை செய்யும் நோக்கில் மிகவும் பாதுகாப்பான முறையில் இரகசியமாக காணிக்குள் புதைத்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இதன்போது, குறித்த அம்பரை கடலில் இருந்து கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் நால்வருடன், அதனை வளவுக்குள் மறைத்து வைத்திருந்த அந்த வீட்டின் உரிமையார் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட அம்பர் , நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்