அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறிப்பிட்ட வெளிநாட்டு தொழில்நுட்ப மற்றும் திறன்வாய்ந்த பணியாளர்களுக்கான H-1B விசா விண்ணப்பங்களுக்கு 100,000 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளார். புதிய உத்தரவின்படி, இந்தக் கட்டுப்பாடு 2027 செப்டெம்பர் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
இந்தக் கட்டணம், அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் H-1B பணியாளர்களை நாட்டுக்குள் அழைத்து வருவதற்கான குறிப்பிட்ட விண்ணப்பங்களுக்கு பொருந்தும். எனினும், அமெரிக்காவின் தேசிய நலனுக்கு அவசியமானதாக கருதப்படும் தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது தொழில்துறைகளுக்கு உள்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் விலக்கு அளிக்க முடியும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
H-1B திட்டம் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புத் திறன் தேவைப்படும் பணிகளுக்கு வெளிநாட்டு பணியாளர்களை நியமிக்கின்றன. வழக்கமாக H-1B விசா தொடர்பான கட்டணங்கள் இதைவிட மிகவும் குறைவாக இருந்த நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் இந்த 100,000 டொலர் கட்டணத்தை வெளிநாட்டு தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் நியமிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையாக விளக்கியுள்ளது.
இதனிடையே, இந்தக் கட்டண உயர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மாசசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள கூட்டாட்சி நீதிபதி ஒருவர் ஜூன் மாதம் இந்தக் கட்டணத்தை அமுல்படுத்தும் அரசின் நடவடிக்கையை சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்திருந்தார். அந்தத் தீர்ப்பை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளதால், 100,000 டொலர் கட்டணத்தின் இறுதி சட்டநிலை இன்னும் நீதிமன்ற பரிசீலனையில் உள்ளது.
மேலும், H-1B திட்டத்தில் ஆண்டுதோறும் வழங்கப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புதிய விசாக்களுக்கு சுமார் 103,000 டொலர் கட்டணத்தை விதிக்கும் தனியான முன்மொழிவையும் அமெரிக்க நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது.










