07 வயது சிறுமியின் கொலைக்கு உதவிய 24 வயது பெண் கைது

இரத்தினபுரி தெல்வல பிரதேசத்தில் 07 வயது சிறுமியின் கொலைக்கு உதவிய 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள ஆற்றின் அருகே கைவிடப்பட்ட மணல் மேட்டில் புதைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

இரத்தினபுரி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், சந்தேகநபர்கள் தெல்வல பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் என அடையாளம் காணப்பட்ட நிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த பெண் பொதுப்பிட்டிவல பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான பெண் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்வல மற்றும் இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.