மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் மற்றும் அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக, உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாகக் குறைந்துள்ளது.
கடந்த வார இறுதியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக மொத்தம் 12 சரக்கு கப்பல்கள் மட்டுமே பயணித்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு நிறுவனமான Kpler-ன் தரவுகளை மேற்கோள்காட்டி Reuters தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய வார இறுதியில் 35 கப்பல்கள் இந்த நீரிணையை கடந்து சென்றிருந்தன.
கண்காணிக்கக்கூடிய கப்பல்களில், ஞாயிற்றுக்கிழமை இரண்டு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தயாரிப்புகளை ஏற்றிச் சென்ற கப்பல்கள் உள்ளிட்ட நான்கு கப்பல்கள் நீரிணையிலிருந்து வெளியேறியுள்ளன. மேலும் இரண்டு சிறிய எண்ணெய் கப்பல்கள் பாரசீக வளைகுடாவுக்குள் நுழைந்துள்ளன. சனிக்கிழமை விவசாயப் பொருட்கள், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மற்றும் உரங்களை ஏற்றிய ஐந்து கப்பல்கள் வளைகுடாவிலிருந்து வெளியேறியதுடன், காலியான மிகப்பெரிய எரிவாயு கப்பல் ஒன்று நீரிணைக்குள் நுழைந்துள்ளது.
எனினும், சில எண்ணெய் கப்பல்கள் தங்களது கண்காணிப்பு டிரான்ஸ்பாண்டர்களை முடக்கிய நிலையில் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகாரப்பூர்வமாக கண்காணிக்கப்படும் கப்பல்களின் எண்ணிக்கை உண்மையான கடல் போக்குவரத்தின் முழுமையான அளவை பிரதிபலிக்காமல் இருக்கலாம்.
போர் தொடங்குவதற்கு முன்னர், ஹோர்முஸ் நீரிணை வழியாக தினசரி சுமார் 125 பெரிய வர்த்தகக் கப்பல்கள் பயணித்தன. உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த முக்கிய கடல் பாதையைச் சார்ந்திருந்தது.
இதற்கிடையில், சவுதி அரேபியாவின் கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தாக்குதல்களையடுத்து, அந்நாடு ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துள்ளதாக Kpler தரவுகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதத்தில் சவுதி கச்சா எண்ணெய் ஏற்றுமதி தினசரி 4 மில்லியன் பீப்பாய்களைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மோதல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் பகுதியில் உள்ள முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளில் ஏற்படும் இடையூறுகள், உலகளாவிய எரிபொருள் விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கவனம் செலுத்தப்படுகிறது.










