ஹெரோயின் போதை பொருளை விற்பனைக்காக கொண்டு சென்ற நபரொருவர் கைது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- கிண்ணியா பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக கொண்டு சென்ற சந்தேக நபரொருவரை பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ரஹ்மானியா வீதியிலிருந்து அண்ணல் நகர் பகுதிக்கு ஹெரோயின் போதை பொருளை நபரொருவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற போது, அல்-அதான் பாடசாலைக்கு முன்னால் வைத்து குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 5 கிரேம் 58 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா- ரஹ்மானியா பகுதியைச் சேர்ந்த எம்.எச்.முகம்மது றிஸ்மி (44வயது) எனவும் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் ஒப்படைத்துள்ளதாகவும் போதைப் பொருள் பிரிவினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.
