ஹற்றன் டிக்கோயா நகர சபையின் வரவு செலவுத் திட்டம்

-மஸ்கெலியா நிருபர்-

ஹற்றன் டிக்கோயா நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்.

தேசிய மக்கள் சக்தியினால் நிர்வகிக்கப்படும் ஹற்றன் டிக்கோயா நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான கன்னி வரவு செலவுத் திட்டம் நேற்று திங்கட்கிழமை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சபையில் நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 12 வாக்குகளும், எதிராக 03 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

15 உறுப்பினர்களைக் கொண்ட ஹற்றன் டிக்கோயா நகர சபையில் கட்சி ரீதியான வாக்குகளில் ஆதரவாக (12 வாக்குகள்) தேசிய மக்கள் சக்தியின் 06 உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 02 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 03 உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சைக் குழுவின் ஒரு உறுப்பினர் ஆதரவாக வாக்களித்தனர்.

அத்துடன், எதிராக (03 வாக்குகள்) ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.

இதற்கமைய, 09 மேலதிக வாக்குகளால் (12-3 என்ற அடிப்படையில்) 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான ஆளும் தரப்பு வெற்றி கொள்ள முடிந்தது.