
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த கடும் நடவடிக்கை
தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொழும்பு மாநகரசபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநகரசபை உறுப்பினர் ஸொஹாரா புஹாரி கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மாநகரசபையில் எதிர்க்கட்சியாகச் செயற்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு தனது உறுப்பினர்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.
எனினும், அதனை மீறி ஸொஹாரா புஹாரி ஆதரவாக வாக்களித்திருந்தார்.
2026 ஜனவரி 9 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம், கட்சியின் ஒழுக்க விதிகளை பாரிய அளவில் மீறியதற்காக அவரது உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முன்னதாக இவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, ஒரு வார காலத்திற்குள் சத்தியக்கடதாசி மூலம் விளக்கமளிக்குமாறு கோரப்பட்டிருந்தார்.
ஆனால், குறித்த காலப்பகுதிக்குள் அவர் பதிலளிக்காதது குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும் என கட்சி தெரிவித்துள்ளது.
இந்தக் கடிதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் அவர்களினால் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்ற சட்டக் கட்டமைப்பின்படி, ஒரு கட்சி தனது உறுப்பினரை சட்ட ரீதியாக நீக்கி, அதனைத் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கும் பட்சத்தில், அந்த உறுப்பினர் தனது சபைப் பதவியை இழக்க நேரிடும்.
எனவே, ஸொஹாரா புஹாரி இந்தத் தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தி வெற்றிபெறத் தவறினால், அவரது கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.
இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக ஸொஹாரா புஹாரி தரப்பிலிருந்து எவ்வித உத்தியோகபூர்வ பதிலும் வழங்கப்படவில்லை.
