ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களை தாக்கிய குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நாட்டவர் கைது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இரண்டு விமான பணிப்பெண்களை தாக்கியதாக கூறப்படும் சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவிக்கையில்,

சந்தேக நபர் ரியாத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் போது, விமானப் பணிப்பெண்களைத் தாக்கியுள்ளார்.

28 வயதான சவுதி நாட்டவரான சந்தேக நபர், மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்டு, ரியாத்தில் இருந்து கொழும்புக்கு பயணித்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

விமானம் தரையிறங்கத் தயாராகும் போது, அனைத்து பயணிகளும் சீட் பெல்ட்களுடன் இருக்க வேண்டும்.

இருப்பினும், சந்தேக நபர் இந்த விதிமுறையை மீறி, கழிப்பறைக்குச் செல்ல முயன்றுள்ளார், இதன்போது அங்கிருந்த விமான பணிப்பெண்களுக்கும் குறித்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிய வருகின்றது.

விமானப் பணிப்பெண்கள் நிலைமையை விமானிக்குத் தெரிவித்ததை தொடர்ந்து, விமானம் தரையிறங்கியதும் சந்தேகநபர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும், சுற்றுலா பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல்நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.