ஷி யான் 6 ஆய்வுக் கப்பல் இன்று இலங்கையை வந்தடையும்
சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த சேவைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ருஹுணு பல்கலைக்கழகத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் சீன புவி இயற்பியல் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இலங்கையை வந்தடையும் என நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.
பின்னர், ஷி யான் 6 கப்பலுடன் நடைபெறவிருந்த ஆய்வுத் திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்தது.
ஷி யான் 6 உடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சம்மதித்த இரண்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் ஒருவர் வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்ததாகவும், மற்றைய விரிவுரையாளர் நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்து முற்றாக விலகியதாகவும் ருஹுணு பல்கலைக்கழகம் முன்னதாக அறிவித்திருந்தது.
இதேவேளை, சீன ஆய்வுக் கப்பலின் வருகை தமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமென இந்தியா தொடர்ந்தும் எதிர்ப்பினை வெளியிட்டுவந்தது.
எவ்வாறாயினும், தமது அதிகாரபூர்வ அனுமதியின் பிரகாரம் சீனாவின் ஷி யான் 6 கப்பல் இலங்கைக்கு வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்