வைத்தியரும் எழுத்தாளருமான ஜலீலாவுக்கு தமிழ் இலக்கியத்துறைக்கான “இளம் கலைஞர் விருது”
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் தமிழ் இலக்கியத்துறைக்கான “இளம் கலைஞர் விருது” மருத்துவத் துறையில் வைத்திய அத்தியட்சகராகப் பணிபுரியும் ஜலீலா முஸம்மிலுக்கு வழங்கிப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய “தமிழ் இலக்கிய விழாவில்” 2023ஆம் ஆண்டின் தமிழ் இலக்கியத்துறைக்கான “இளங்கலைஞர் விருது” வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த புதனன்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் இவ்விருது திருகோணமலையில் வைத்து வழங்கப்பட்டது.
இலக்கியத் துறையிலும் கூடுதலான ஈடுபாட்டுடன் பயணித்து வரும் வைத்தியர் ஜலீலா, இதுதுவரை சுமார் 40இற்கு மேற்பட்ட மருத்துவ, இலக்கிய ஆக்கங்களைப் படைத்துள்ளார்.
இவரது ஆக்கங்கள் இலங்கை, இந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.
அதேவேளை இவர் தனது இலக்கிய மருத்துவ படைப்பாக்கங்களுக்காக பல்வேறுபட்ட விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
இவரது “சிறகு முளைத்த மீன்” எனும் முதற்கவிதை நூல் தமிழ்நாடு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எழிலினிப் பதிப்பகத்தால் வெளியிட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் துயில் நதிப் பூக்கள், மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல், தன்முனைக் கவிதை நூல், வலிமை மிகு எண்ணங்கள், தன்னம்பிக்கை கட்டுரைத் தொகுப்பு நூல், தன்முனை ஆய்வு நூல், வளரி 1001 கவிதைகள் ஆகிய இன்னும் பல படைப்பாக்கங்களை நூலாக வெளியிட தான் உத்தேசித்துள்ளதாக எழுத்தாளர் வைத்தியர் ஜலீலா தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்