-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி எஸ் பாஹிமா தலைமையில் அங்கு பணி புரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து 30 நிமிடங்கள் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு அமைதி போராட்டம் நடத்தினர்.
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களினால் வைத்தியசாலையில் உள்ள வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவுகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போதும், முதலுதவி சிகிச்சை அளிக்கும் போதும், ஏற்பட்டு வரும் சிக்கல் நிலையில் நோயாளிகள் கொலை மிரட்டல் மற்றும் தாக்குதல் போன்றவை தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறவழி போராட்டம் நடத்தினர்.
குறிப்பாக கடந்த 25 ம் திகதி அன்று, நோயாளி ஒருவர் சுகவீனம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது, அவரது படுக்கைக்கு அடுத்த படுக்கையில் இருந்த நோயாளி, அவர் சிகிச்சை முடிந்த பிறகு சிகிச்சை அளித்த உத்தியோகத்தரை தாக்கியதுடன், கொலை மிரட்டல் செய்தமைக்காகவும், இதற்கு முன் இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெற்றமையை எதிர்த்தும், இந்த அறவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் இச் சம்பவம் குறித்து 25 ம் திகதி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பாதிக்கப்பட்ட வைத்திய சாலையில் உள்ள உத்தியோகத்தர் பதிவு செய்து உள்ளார்.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் நடவடிக்கை எடுத்து சந்தேக நபரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



