வேலை நேரத்தின் பின் அலுவலக அழைப்புகளை நிராகரிக்கலாம்!

தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையிலும் பிரான்ஸ், ஸ்பெயின் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

அதாவது, வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பைத் துண்டிக்கும் உரிமையை இந்தச் சட்டம் வழங்குகிறது.

இந்த நாடுகளின் வரிசையில் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய-இடது தொழிலாளர் கட்சியின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்தச் சட்டத்திருத்தம் பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய பசுமை கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த புதிய சட்டத்திருத்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டது.

அலுவலக நேரத்திற்குப் பிறகு தொழிலாளர்களைத் தொடர்புகொள்ளும்போது, நியாயமற்ற காரணமாக இருந்தால் அந்த அழைப்பை நிராகரிக்கலாம்.

நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்குப் பதில் அளிக்கலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம்.

இது தொடர்பாக ஏதேனும் பிரச்சனை எழுந்தால் அவுஸ்திரேலியாவின் நியாய வேலை ஆணையத்திடம் முறையிட்டு, இறுதி முடிவு எடுக்கலாம் எனப் பசுமை கட்சி முன்மொழிந்துள்ளது.

இந்நிலையில், வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பைத் துண்டிக்கும் உரிமைச் சட்டம் வரும் 26ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளது என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்