வேலைநிறுத்தம் ஒரு சதத்துக்கும் பிரயோசனம் இல்லை! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
எந்தவொரு கோரிக்கையை முன்னிட்டேனும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது மிகப் பெரும் தவறு என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விமர்சித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், வேலைநிறுத்தப் போராட்டங்கள் காரணமாக இழக்கப்படும் 24 மணிநேரமோ அல்லது 48 மணிநேரமோ அதனை ஈடுசெய்ய அதன் பின்னரான ஒருவாரம் வரை கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
அதன் காரணமாக தொழிற்சங்கத் தலைவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன், நீங்கள் வீதிக்கு இறங்கி வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் செய்துவிடுவதால் மாத்திரம் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது.
ஒருசில விடயங்கள் தொடர்பில் நாங்கள் அதனை மேற்கொள்ள திறைசேரியுடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டியிருக்கும்.
அதற்காக குறிப்பிட்ட காலம் எடுக்கும். எனவே வேலைநிறுத்தம் மேற்கொள்வதால் ஒரு சதத்துக்கும் பிரயோசனம் இல்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த காலங்களில் தொடர்ச்சியாக மிகப்பெரும் ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்களை மேற்கொண்டதன் ஊடாகவே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.