
வேன் மோதி யானைக்குட்டி உயிரிழந்ததால் வேன் மீது யானைகள் தாக்குதல்!
கிண்ணியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, யானைக் குட்டியுடன் மோதிய விபத்தில் அந்த யானைக் குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
இதனால் ஆக்ரோஷமடைந்த பெரிய யானைகள் வேனைத் தாக்கியதில், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று சனிக்கிழமை அதிகாலை 12 மணியளவில், கிண்ணியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த வேன், ஹபரண – கல்ஓயா வீதியில் திடீரெனக் குறுக்கே வந்த யானைக் குட்டி ஒன்றுடன் மோதியுள்ளது.
விபத்தில் யானைக் குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத் தொடர்ந்து, அருகிலிருந்த ஏனைய பெரிய யானைகள் அவ்விடத்திற்கு விரைந்து, ஆக்ரோஷமடைந்த நிலையில் பயணிகள் இருந்த வேனைத் தாக்கி கடுமையாக சேதப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், வேனில் பயணித்த கிண்ணியாவைச் சேர்ந்த பெண் ஒருவரின் கால் முறிந்த நிலையில், அவர் உடனடியாக ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், வேன் மீதான தாக்குதல் மற்றும் விபத்தினால் சிறு காயங்களுக்கு உள்ளான ஏனைய பயணிகள், மேலதிக சிகிச்சைக்காக அவர்களின் சொந்த இடமான கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஹபரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யானைகள் அதிகம் நடமாடும் இந்தப் பகுதியில், குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
