சீன மின்சார வாகன உற்பத்தியாளர்கள், வாகனங்களை மிகக் குறுகிய நேரத்தில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தீவிர போட்டியில் ஈடுபட்டுள்ளனர். Geely, BYD, Li Auto உள்ளிட்ட நிறுவனங்கள், பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நேரத்துக்கு நெருக்கமாக மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன.
Geely நிறுவனம் அண்மையில் 2.25 மெகாவாட் உச்ச மின்னேற்ற திறன் கொண்ட அதிவேக சார்ஜிங் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மின்சார வாகனமொன்றை 10 சதவீதத்திலிருந்து 70 சதவீதம் வரை 4.5 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 10 முதல் 97 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 8 நிமிடங்கள் 40 விநாடிகள் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, BYD நிறுவனத்தின் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் 10 முதல் 97 சதவீதம் வரை சுமார் 9 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Li Auto நிறுவனத்தின் சில மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் CATL பேட்டரிகள், 12 நிமிடங்களில் 500 கிலோமீற்றர் வரையிலான பயணத் தூரத்தை வழங்கும் அளவுக்கு சார்ஜ் செய்யக்கூடியதாக உள்ளன.
எனினும், இவ்வளவு அதிக மின்சக்தியில் பேட்டரிகளை சார்ஜ் செய்வது வெப்ப அதிகரிப்பு, பேட்டரி தேய்மானம், தீ அபாயம் மற்றும் மின்கட்டமைப்பில் ஏற்படக்கூடிய அழுத்தம் உள்ளிட்ட சவால்களை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால், அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் பேட்டரி பாதுகாப்பு மற்றும் வெப்பக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களையும் சீன நிறுவனங்கள் ஒருங்கிணைத்து வருகின்றன.










