வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு: விவசாயிகள் கவலை

-மூதூர் நிருபர் –

திருகோணமலை – கிண்ணியா பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட, மகாமாறு குளத்துக்கட்டு வீதி, வெள்ளம் காரணமாக பயணம் செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி, கல்லடிவெட்டுவான், சுங்கான்குழி, நடுவூற்று, குரங்குபாஞ்சான் மற்றும் தீனேரி ஆகிய விவசாய கிராமங்களை இணைக்கின்ற பிரதானமான வீதியாகும்.

இந்த விவசாய கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வேளாண்மை செய்கை பண்ணப்படுகின்றது. மேலும் மேட்டு நில பயிர்ச்செய்கை, கால்நடை பண்ணைகள் என கிண்ணியா பிரதேசத்தின் பொருளாதார முதுகெலும்பு இந்தப் பகுதியிலேயே அமைந்துள்ளது.

இதன் காரணமாக, நாளாந்தம் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களும் இந்த வீதியை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக, இந்த மக்கள் இதே துன்பத்தைத்தான் அனுபவித்து வருகின்றனர்.

பெரும்போக அறுவடை ஆரம்பித்திருக்கின்றது. இந்த வீதியின் ஊடாகவே நெல்லை ஊருக்குள் கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால் உழவு இயந்திரம் சேற்றுக்குள் புதைகின்றது. இதனால் போக்குவரத்து செலவு அதிகமாகின்றது. இந்த நிலையில், நெல்லுக்கு போதுமான நிர்ணயவிலை இல்லை. இதனால் நாங்கள் நட்டமடைகிறோம் என விவசாயிகள் தங்கள் கவலையை தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் பருவ மழை காலங்களில் இதே கஷ்டத்தைதான் தொடர்ந்து இவர்கள் அனுபவித்து வருகின்றார்கள். இது தொடர்பாக இந்தப் பகுதியில் உள்ள சமூகமட்ட அமைப்புக்கள் அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172