வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை, புனே நகரங்கள்: 6 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் மகாராஷ்டிராவில் மும்பை, புனே நகரங்களில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மகாராஷ்டிராவில் மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடந்தசில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

புனே நகரில் தாழ்வான பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் அவற்றில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புனே மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை வெள்ளத்தில் மூழ்கி 3 பேரும் நிலச்சரிவில் சிக்கி ஒருவரும் உயிரிழந்தனர். இதுபோல் பிற பகுதிகளில் இருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், புனே மற்றும் அதையொட்டிய பிம்ப்ரி சின்ச்வத் பகுதி அதிகாரிகளுடன் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் தேவை ஏற்பட்டால் மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்