
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் தேடிச் செல்ல வேண்டும் – ஆளுநர் தெரிவிப்பு
-யாழ் நிருபர்-
வெள்ளத்தில் தனது உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஒருவரால் அதிகாரிகளைத் தேடி அலுவலகங்களுக்கு அலைந்து திரிய முடியாது. எனவே, அதிகாரிகளே அந்த மக்களைத் தேடிச் சென்று விவரங்களைச் சேகரிக்க வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அத்துடன், பொதுமக்கள் தமது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில் முயற்சிகளைப் பதிவு செய்வதில் காட்டும் அக்கறையின்மையே, அனர்த்தங்களின் போது அவர்களுக்குரிய நிவாரணங்கள் கிடைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண சிக்கனக் கடனுதவி கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், இயற்கைப் பேரிடரால் தமது சங்கம் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்து ஆளுநருடன் நேற்று திங்கட்கிழமை மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘எமது மக்களிடம் ஒரு மிகப் பெரிய குறைபாடு உள்ளது. அவர்கள் விவசாயம், கால்நடை உள்ளிட்ட தங்கள் தொழில் முயற்சிகளை அரச கட்டமைப்புக்குள் பதிவு செய்வதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. இந்த அக்கறையின்மை, தற்போது ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரிடர் போன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தால் வழங்கப்படும் இழப்பீடுகள் மற்றும் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் அவர்களுக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. நடந்தவற்றை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இப்போதாவது மக்கள் தங்கள் தொழில் முயற்சிகளை முறையாகப் பதிவு செய்ய வேண்டும்,’ என்று கேட்டுக்கொண்டார்.
நிவாரணப் பணிகளில் அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்துப் பேசிய ஆளுநர், ‘எமது அதிகாரிகள் பலர், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற மனிதாபிமானப் பார்வையைக் கொண்டிருக்கவில்லை. ‘சுற்றறிக்கைகளில் இல்லைத்தானே, நாம் ஏன் உதவ வேண்டும்?’ என்ற ரீதியிலேயே செயற்படுகிறார்கள். இதனால்தான் ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் விவரம் தந்தால் பதிவு செய்வோம், தராவிட்டால் விட்டுவிடுவோம் என்று அலுவலகத்தில் இருந்து கொண்டு அதிகாரிகள் செயற்பட முடியாது. அழிவுகளைச் சந்தித்த மக்கள் அந்தத் துயர மனநிலையிலும், இழப்புக்கள் குறித்த கவலையிலும்தான் இருப்பார்கள். இதனைப் புரிந்து கொண்டு, அதிகாரிகளே களத்துக்குச் சென்று தகவல்களைத் திரட்ட வேண்டும். இது குறித்துத் தகுந்த அறிவுறுத்தல்களை நான் வழங்கியுள்ளேன், என்று ஆளுநர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் சம்மேளனங்களின் மாவட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



