
வெள்ளத்தால் பரவும் கண் நோய்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், பல மாவட்டங்களில் தற்போது பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் கார்னியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் குசும் ரத்னாயக்க தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் உட்பட பலருக்கு சமீபத்திய வாரங்களில் அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்துப் பரவுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டு, சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு திட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.
மேலும் கண்கள் சிவத்தல், வீக்கம் மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கை-கண் தொடர்பு, இருமல் அல்லது தும்மல் மூலம் பரவுதல் மற்றும் தனிப்பட்ட பொருட்களைப் பகிர்வதன் மூலம் இந்த நோய் பரவுகிறது.
அடிக்கடி கை கழுவுதல், கண்களைத் தேய்ப்பதைத் தவிர்த்தல் மற்றும் தனிப்பட்ட பொருட்களைப் பகிர்வதைத் தவிர்ப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளைச் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் மோசமடையும் அறிகுறிகளுக்கு உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்துகின்றனர்.
