வெளிநாட்டுப் பெண்ணிடம் அத்துமீறிய களுவாஞ்சிகுடி இளைஞன் கைது
-களுவாஞ்சிக்குடி நிருபர்-
திருக்கோவிலில் பகுதியில் வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பான, வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து நாட்டவர் அளித்த புகாரின் பேரில், களவாஞ்சிகுடியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என , பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பையில் இருந்து பாசிக்குடா நோக்கி பயணித்தபோது, ஒரு இளைஞன் தனது சுற்றுலாவின் போது அநாகரீகமாக நடந்து கொண்டதாக , அந்தப் பெண் தெரிவித்ததாக , சுற்றுலா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணி ஒருவர் பாலியல் துன்புறுத்த முயற்சிப்பதைக் காட்டும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டதை அடுத்து இந்த சம்பவம் பரவலான பலருடைய கவனத்தைப் பெற்றது.
குறித்த நபரை கைது செய்வதற்காக பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர்.
வெளிநாட்டுப் பெண் தான் பயணம் செய்த ஆட்டோவை நிறுத்தி வெளிப்புறங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, குறித்த நபர் தன்னை அணுகியதையடுத்து அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணி இந்த எதிர்பாராத சம்பவம் குறித்து பயத்தையும் அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தி இருந்தார்.
குறித்த இளைஞன் கைது செய்யப்படும் போது தனது ஆள் அடையாளத்தை மாற்றியிருந்ததோடு , இருப்பிடத்தையும் மாற்றியிருந்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவர் மேலதிக விசாரணைகளுக்காக திருக்கோவில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.

