வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லுமாறு சத்தியமூர்த்தியை மிரட்டிய அர்ச்சுனா
-யாழ் நிருபர்-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகைத் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், தன்னை “சேர்” என்று அழைக்குமாறும் கூறி எம்மோடு முரண்பட்டார்.
அவரை சேர் என்று அழைக்க முடியாது என்று பதிலளித்ததற்கு, என்னை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து அகற்றுவேன் எனவும், நாடாளுமன்றத்திற்கு அழைத்து கேள்வி கேட்பேன் என்றும் கூறினார், அத்துடன் என்னை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லுமாறு கூறினார்.
அத்தோடு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் உள்நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பம் விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது.
மீண்டும் ஒருமுறை அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க முற்படுவராயின் அவர் வாசலிலேயே வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார், என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்