
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற யுவதிக்கு நடந்த விபரீதம்
-திருகோணமலை நிருபர்-
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற போது, அங்கு இளைஞரொருவர் தன்னை திருமணம் முடித்து, தன்னிடம் இருந்த சொத்துக்களை பறித்து விட்டு தன்னை நடுத்தெருவில் விட்டுச் சென்றுள்ளதாகவும், தனக்கு நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரி குறித்த இளைஞனின் வீட்டிற்கு முன்னால் திருகோணமலையைச் சேர்ந்த யுவதி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
திருகோணமலை-ரொட்டவெவயைச் சேர்ந்த ரபீக் நிம்சாத் என்பவருடைய வீட்டுக்கு முன்னாலேயே இன்று வியாழக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
தந்தையின்றி வளர்ந்து வந்த இந்த யுவதி கஷ்டம் காரணமாக குவைத் நாட்டிற்குச் சென்றதாகவும், அங்கு வீட்டு பணிப் பெண்ணாக வேலை செய்து வந்தபோது அங்கு அநியாயம் இடம்பெற்ற நிலையில் குறித்த இளைஞர் தன்னை திருமணம் செய்து இரண்டு வருடங்களாக வாழ்ந்து வந்ததாகவும், தான் உழைத்த அனைத்து சொத்துக்களையும் இவருக்கே கொடுத்ததாகவும், அத்தனை சொத்துக்களையும் பெற்றுக் கொண்டு தன்னை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட யுவதி தெரிவித்தார்.
தன்னை திருமணம் செய்து தன்னிடம் இருந்த சொத்துக்களை இளைஞனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கணவனுடன் இணைந்து பெற்றுக் கொண்டதாகவும், தன்னிடம் வாங்கிய சொத்துக்களை பெற்றுத் தருமாறும், கணவன் மனைவியாக வாழ்ந்த நேரத்தில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதாகவும், இவ்வாறான செயற்பாட்டிற்கு தனக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு கோரியே யுவதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்ததுடன், தனக்கு நடந்த சம்பவத்திற்கு நீதியை ஊடகங்கள் ஊடாக வெளிநாட்டு பணியகத்துக்கு தெரியப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கின்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை நிறுத்தி தருமாறும் இதன்போது குறித்த யுவதி கோரிக்கை விடுத்தார்.
