வெளிநாடு செல்ல விரும்பும் அரசு ஊழியர்களை ஊக்குவிக்க: அரசின் புதிய திட்டம்

வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆங்கில நாளேடு ஒன்று வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.

வேலை அல்லது வேறு எந்த நோக்கங்களுக்காக வெளிநாடு செல்லும் அரச ஊழியர்கள் ஐந்தாண்டுகளின் முடிவில் சம்பளம் இல்லாத விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் மூப்பு மற்றும் தரங்களை மீளப் பெறுவார்கள்.

இதன் மூலம் அரசு ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்கம் கிடைக்கும். எனவே, இத்திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் என தி சண்டே ஒப்சர்வர் செய்தித்தாளுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.