வெலே சுதா மற்றும் அவரது மனைவி உட்பட 3 பேருக்கு 8 ஆண்டுகள் கடூழிய சிறை!

போதைப்பொருள் கடத்தல்காரரான சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம்,  8 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதற்காக,  பணமோசடி சட்டத்தின் கீழ், நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகள் என்று கண்டறிந்ததை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெண்டிகே இன்று புதன்கிழமை இவ்வாறு தீர்ப்பளித்தார்.

பிரதிவாதிகளுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம், சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்து, பணம் மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.

போதைப்பொருள் கடத்தல்காரர் கம்போலா விதானகே சமந்த குமார எனப்படும் ‘வெலே சுதா’ தற்போது மரண தண்டனை அனுபவித்து வருகிறார்.

வெலே சுதா ,  அவரது மனைவி கயானி பிரியதர்ஷனி மற்றும் அவரது உறவினர் வசந்தி வசுந்தரா ஆகியோர் மீது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாக, உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர்,  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

ஹெராயின் போதைப்பொருள் கடத்தலின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட 150 மில்லியன் மதிப்புள்ள நிலம் மற்றும் வீடுகளை கையகப்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.