வெருகல் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – வெருகல் பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டம் வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.எம்.அனஸின் ஒருங்கிணைப்பிலும் , மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நேற்று வியாழக்கிழமை வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் கடந்த வெருகல் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்,

வெருகல் -சேருவில எல்லைப் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட நடவடிக்கை,வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் பொதுமக்கள் குடியிருக்கும் இடங்கள் வனஜீவராசிகளௌ திணைக்களத்தின் கீழ் உள்ளது இதனை எவ்வாறு பொதுமக்களுக்கு மீட்டுக்கொடுப்பது,வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள்,வெருகல் பிரதேசத்திலுள்ள காணிகளை பதிவு செய்தல்,மேய்ச்சல் தரைப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளல்,கருக்காமுனை -புன்னையடி ஆற்றுக்கு இடையே பாலம் அமைத்தல் என பல பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன்,ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கருணாநிதி ,வெருகல் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதோடு திணைக்களத் தலைவர்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.