
வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும்!
இலங்கை உட்பட பூமத்திய ரேகைப் பகுதியில் அமைந்துள்ள பல நாடுகளில் தற்போதைய நாட்களில் அதிக வெப்பநிலை பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு முதலாவது பருவமழை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கிடைக்கப்பெறும்.
வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முந்தைய நிலையில் பெப்ரவரி மாதம் உள்ளது.
இந்த காலப்பகுதியில் காலையில் சூரிய ஒளி பூமியைத் தீவிரமாகத் தாக்குவதுடன், தற்போதைய நாட்களில் காற்றின் ஈரப்பதனில் குறிப்பிடத்தக்க அளவு குறைவையும் அவதானிக்கலாம்.
எனவே வளிமண்டலத்தில் நீராவி சேர்க்கப்பட்டாலும், மேகங்கள் உருவாகும் போக்கு குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.
பிரதானமாக கொழும்பு, காலி, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார், அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் அதிகளவாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலை இரத்தினபுரியில் பதிவாகியிருந்த நிலையில் அங்கு 36.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
இந்த சூழ்நிலையில் உடல் வெப்பநிலை அதிகரிப்பது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் அதிக தண்ணீர் அல்லது இயற்கையான பானங்களை அருந்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிக வெப்பநிலை காரணமாக உடலில் வியர்வையாக, நீர் மற்றும் கனியுப்புகள் வெளியேறுவதால் அதிகளவில் நீரிழப்பு ஏற்படுகிறது.
தற்போதைய நாட்களில் திறந்த வெளியில் வேலை செய்பவர்கள், குறிப்பாக நெடுஞ்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடுமையான நீரிழப்பு இதயத்தையும் மூளையையும் பாதிக்கும் எனவும் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வெப்பமான காலநிலையில், ஈக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும், இதனால் ஏற்படக்கூடிய வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அவர் கோரியுள்ளார்.
இதற்கிடையில், நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும்போது ஆசிரியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கோரியுள்ளார்.
