வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற மத அனுஷ்டானங்களின் போதான சம்பவம் கண்டிக்கத்தக்கது இதற்காக நீதி தேவை எனவும் கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை மூதூரில் இடம் பெற்றது.

மக்கள் மறுமலர்ச்சி மன்றம் ஏற்பாடு செய்திருந்த குறித்த போராட்டமானது மூதூர் பேருந்து நிலைய வீதியில் இருந்து பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலாளரிடம் மனு கையளிக்கப்பட்டது.

ஆர்பாட்டகாரர்கள் இலங்கை அரசே எமது வழிபாட்டு உரிமையை உறுதி செய் போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் இதன் போது கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஊடகங்களுக்கு அதன் அமைப்பாளர் பாஸ்கரன் பிரபாகரன் இவ்வாறு கருத்துரைத்தார்,

கடந்த எட்டாம் திகதி வெடுக்குநாறியில் நீதிக்கும் சட்டத்துக்கும் புறம்பான கைதை கண்டிக்கிறோம் தொல்பொருள் எனும் போர்வையில் இவ்வாறான தொல்லை கொடுக்கப்படுகிறது தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்க நினைக்கின்றனர் ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக வாழ வழிவிட வேண்டும்.நீதியான விசாரணை தேவை கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்து தாருங்கள் எனவும் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

திருகோணமலை மாவட்ட ஒன்றிணைந்த சிவில் அமைப்புக்கள் இணைந்து இப்போராட்டத்தினை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.