வெடுக்குநாறிமலை நீதிபதிக்கும் உயிர் அச்சுறுத்தல்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட எட்டு பேரை விடுதலை செய்த வவுனியா நீதிமன்ற நீதவானுக்கு வடக்கு எமது உரிமை என்ற சிங்கள முக நூல் (பேஸ்புக்) ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘வடக்கு எமது உரிமை’ எனும் பெயரில் உள்ள சிங்கள முகநூல் பக்கத்தில் இந்த விடுதலை தீர்ப்பை வழங்கிய நீதியரசர் பெயரைக் குறிப்பிட்டு, விரைவில் அவர் குருந்தூர் மலை விவகாரத்தில் தீர்ப்பு வழங்கியவர் நாட்டை விட்டு ஐரோப்பாவிற்கு தப்பி ஓடியது போன்று செல்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இது குறித்து நேற்று புதன் கிழமை நாடாளுமன்றத்தில் எஸ்.சிறீதரன் கடும் வாதத்தை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீதியாக வழங்கப்படும் தீர்ப்பைக்கூட சிங்கள பேரினவாதத்தால் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது என்பதைத்தான் இந்த சிங்கள முகநூல் செய்தி மிகவும் வெளிப்படையாக குறிப்பிடுகின்றது.

இந்த நாட்டில் அடிக்கடி நல்லிணக்கம் பற்றி பேசுகின்றவர்கள் வெடுக்குநாறிமலையில் நடந்த காவல்துறை அராஜகம் பற்றி கருத்தில் கொள்ளுங்கள்.

தான் விரும்பும் மதத்தை வணங்கமுடியாத நாட்டில் எப்படி உங்களினால் நல்லிணக்கம்பற்றி வாய் கிழிய கத்த முடியும் ? நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மட்டும் இருப்பதல்ல.

அது ஓர் இன மக்களை அனுசரித்தது நடப்பதில்தான் அது உள்ளது எனவே வெடுக்குநாறி மலையில் இந்து மக்கள் வழிபட எந்த தடையும் இனிமேல் இருக்கக்கூடாது.

இந்தப்பிரச்சினைக்கு முழுமையான காரணம் தொல்பொருள்துறைக்கு அமைச்சராக இருக்கின்ற விதுர விக்ரமநாயக்கதான்.

அவர் ஒரு நேர்மையாக கள்ளம் கபடமற்று இதய சுத்தியோடு செயற்படுவாரேயானால் இனங்களை மதித்து செயற்படுவாரேயானால் இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்க நியாயமில்லை .

வெட்டுக்குநாறிமலையில் தொல்லியல் திணைக்களமும் காவல்துறையினரும் அராஜகமாக நடந்து கொண்ட முறை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கும் நான் எழுதிய கடிதத்தின் பிரதியையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவரது இந்த கருத்து தமிழர்களுக்கு எதிராக அரங்கேறும் இனவாத எதிர்ப்பை நேரடியாக சுட்டிக்காட்டுவதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.