வெங்காயத்தை கொள்வனவு செய்யும் போது வெங்காயம் அளவிடப்படுவதில்லை – லங்கா சதோச நிறுவனம்

மத்திய நிலையங்கள் மூலம் பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்யும் போது, வெங்காயம் அளவிடப்படுவதில்லை என லங்கா சதோச நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெங்காயம் அளவிடப்படுவதற்கு பதிலாக, உரிய அதிகாரிகள் அதனைக் கண் மட்டத்தில் ஆய்வு செய்து கொள்முதல் செயல்முறைகளை மேற்கொள்வார்கள் என, சதொச நிறுவனத்தின் தர உறுதிப்பாட்டு பிரிவின் தலைவர் லஹிரு சமங்க தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் தங்கள் பெரிய வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாத பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே லங்கா சதோச பெரிய வெங்காய கொள்வனவுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இருப்பினும், இதற்காக 17 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதுடன், ஒரு பெரிய வெங்காயத்தின் விட்டம் 35 முதல் 65 மில்லி மீட்டர் வரை இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தில் 8 வெங்காயம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

எனினும், இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அளவுகோல்களை பூர்த்தி செய்யும் பெரிய வெங்காயம் தங்களிடம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.