வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதலை மட்டுப்படுத்த உயர்மட்ட குழு
வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல்
ஆகியவற்றை மட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உயர்மட்ட
குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல
ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெற்ற “Safe Roads – Safe
Children” சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் மருத்துவச் சங்கத்தின் (SLMA) வீதி விபத்துக்களை
கட்டுப்படுத்துவதற்கான நிபுணத்துவ குழுவினால் இந்த மாநாடு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. வீதி விபத்துக்களால் தவிர்க்க முடியாத வகையில்
நேரும் சிறுவர் மரணம், வாழ்நாள் முழுவதுமான அங்கவீனம் உள்ளிட்ட விடயங்கள்
தொடர்பில் மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, அதற்காக கல்வி,
சுகாதாரம், போக்குவரத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளின்
பணிகள் தொடர்பிலும் பல சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றன.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க,
இந்த நிகழ்விற்காக அழைப்பு விடுக்கப்பட்ட வேளையில், வீதி
விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை
மட்டுப்படுத்துவதற்கான குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசித்தோம். அது
தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையின் ஜனாதிபதியினால் நிறுவப்பட்ட
உயர்மட்ட குழு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.
இங்கு பல பிரச்சினைகள் உள்ளன. முதலில் கவனமின்றி வாகனம் செலுத்துதல்.
அடுத்தது நாம் பயன்படுத்தும் முச்சக்கரவண்டி போன்ற சில வாகனங்கள் உரிய
பாதுகாப்பு தரம் உறுதிப்படுத்தப்பட்டதாக இல்லாமல் இருத்தல். ஒரே இரவில்
செய்ய முடியாவிட்டாலும் மேற்படி சவாலை எவ்வாறு வெற்றிக்கொள்ள முடியும்
என்பதை அறிய வேண்டும்.
பெருமளவான மக்களின் வாழ்வாதாரமாக முச்சக்கர வண்டியே காணப்படுகிறது.
பலருடைய போக்குவரத்து தேவைகளும் அதன் மீதே தங்கியுள்ளது. அதனால் நாடு
பொருளாதார ரீதியாக பலமடையும் வரையில் முச்சக்கர வண்டிகளை பாதுகாப்பான
முறையில் பயன்படுத்துவதற்கான திட்டமொன்று அவசியம். அதற்காக சிறிது காலம்
தேவைப்படும்.
அதேபோல் வீதிகளின் தன்மை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். எமது
நாட்டின் வீதிக் கட்டமைப்புக்கள் பெருமளவில் மேம்படுத்தப்படவில்லை.
தெற்கு அதிவேக வீதியில் மழைக்காலத்தில் நீர் நிரம்பிவிடுகிறது.
உங்கள் வாகனத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அல்லது
வாகனத்தை செலுத்திச் செல்லும் போது ஏற்படும் தூக்கக் கலக்கத்தை போக்க
வாகனத்தை சிறிது நேரம் தரித்துச் செல்வதற்கான தடமொன்று இருக்குமாயின்
அச்சுறுத்தலான நிலைமை உருவாகாது.
அதேபோல் விபத்துக்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போதும்
பிரச்சினைகள் எழுகின்றன. அவர்களுக்கு போதியளவில் பணிக்குழாம் இல்லாமை
தொழில்நுட்பங்கள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை
அனைத்தும் தீர்க்கப்படும் வரையில் காத்திருந்தால் நமது பிரச்சினைகள்
மேலும் உக்கிரமடையும்.
அவ்வாறாயின் நமக்கு இதற்கான குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால
தீர்வுகள் அவசியமாகும். மேற்படி பணியை ஏற்றுக்கொள்ளம் குழு பல்வேறு
விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். வாகன இறக்குதி தொடர்பான
கொள்கை தயாரிப்பிற்கான ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி தொடர்பான திறந்த கொள்கையொன்று பின்பற்றப்பட வேண்டுமா
அல்லது சிங்கப்பூரை போன்று வருடாந்தம் குறித்தளவு அனுமதிப் பத்திரங்களை
மாத்திரம் பயன்படுத்தும் முறைமைக்குச் செல்ல வேண்டுமா என்பது தொடர்பில்
ஆராய்கிறோம்.
அதேபோல் வீதிகளில் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்படும் வாகனங்களின்
எண்ணிக்கையை பேணி வேண்டுமெனில் குறித்த தொகை வாகனத்தை நாட்டிலிருந்து
அகற்ற வேண்டிய அவசியமும் உள்ளது. அத்தோடு வழமையான டீசல், பெற்றோல்
வாகனங்களுக்கு மாறாக இலத்திரனியல் வாகனங்களின் பயன்பாடு குறித்தும்
சிந்திக்க வேண்டும்.
இதன்போது எதிர்கால பொருளாதார நிலைமை மற்றும் வீதிகளின் நிலைமைகள்
தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் வீதி விபத்து என்ற விடயமும்
இங்கு முக்கியமானது. எனவே மேற்படி குழுவானது திட்டமிடலை தயாரிக்கும்
முன்னதாக உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்கான
உரிய காலம் இதுவென்பதோடு, அதற்கான தகுந்த காலம் இதுவாகும் எனவும்
நம்புகிறேன்.
அதற்மைய வீதி விபத்துக்கள், அதனை அண்டிய மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதலை
மட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் துரித நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான மேலதிக பேச்சுவார்த்தைக்காக இலங்கை மருத்துவச்
சங்கத்தின், வீதி விபத்துக்களை தடுப்பதற்கான (SLMA) குழு மற்றும்
ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பொன்று தற்போதும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த சாகல ரத்நாயக்க இதற்காக
நீண்டகாலமாக பாடுபடும் அனைவருக்கும் நன்றி கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்