வீதியை கடக்க முயன்றவர் மீது மோதிய தனியார் பேருந்து!

மகரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பன்னிப்பிட்டிய சந்திப்பிற்கு அருகில், நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல், இடம்பெற்ற வீதி விபத்தில், 77 வயதுடைய ஆண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

கொட்டாவையிலிருந்து மகரகம நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பன்னிப்பிட்டிய சந்தியின் அருகில் வீதியை கடக்க முயன்ற பாதசாரியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் ஹொரணை பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய நபர் ஆவார்.

இவ் விபத்து தொடர்பில் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தின் ஓட்டுநர் மகரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மகரகம பொலிஸ் நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.