
விழிப்புணர்வு நடை பவனியும் வீதி நாடக அரங்கேற்றமும்!
-மட்டக்களப்பு நிருபர்-
இளைஞர்களுக்கு டிஜிட்டல் பாதைகள் பற்றிய விழிப்புணர்வு நடை பவனியும் வீதி நாடக அரங்கேற்றமும் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்றது.
உலக வாலிபர் தினத்தையொட்டி அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலையம் மற்றும் முறக்கொட்டாஞ்சேனை பரி.பவுல் ஆலயம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
“இளைஞர்களே டிஜிட்டல் பாதைகள் தொடர்பில் அறிந்திருங்கள்” எனும் தொனிப்பொருளில் முறக்கொட்டாஞ்சேனை – அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலையம் முன் ஆரம்பமான பேரணி சித்தாண்டி பிரதான வீதி வழியாகச் சென்று பொதுச் சந்தையை அடைந்து, அங்கிருந்து மீண்டும் சித்தாண்டிச் சந்தியை வந்தடைந்தது.
இதன் போது கையில் விழிப்புணர்வு பதாதைகளைப் பேரணியில் பங்கேற்றோர் ஏந்திச் சென்றனர்.
பேரணியைத் தொடர்ந்து சித்தாண்டிச் சந்தியில் விழிப்புணர்வு நாடகமும் ஆலய வாலிபர்களால் நிகழ்த்தப்பட்டது.
அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலைய முறக்கொட்டாஞ்சேனை பரி.பவுல் ஆலயத்தின் இயக்குனர் அருட்பணி நேசராஜா சபிலாஷ் , அதன் முகாமையாளர் பிரதீபா மரியஸ் டெனிஸ்லஸ், இளைஞர் பிரதேச மன்ற பிரதேச சம்மேளனத் தலைவர் இ.கிசோக் பிரசன்னா, புனித பவுலின் ஆலய மூப்பர் திருமதி யூட் ஹேமா, ஞான ஒளி விளையாட்டுக்கழகத் தலைவர் சி.பிரதீபன் உள்ளிட்டோருடன் தேவாலய வாலிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வை த.அருள்நேசன் மற்றும் ஜே.ஷலோம்மீகா ஆகியோர் இணைந்து ஒருங்கிணைப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

