விராட் கோலியின் சாதனையை முறியடித்து சூர்யகுமார் யாதவ் சாதனை
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் இந்திய மற்றும் அமெரிக்க அணிகள் மோதின. மும்பையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களைப் பெற்றது. அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்களையும் , 4 ஆறு ஓட்டங்களும் அடங்கலாக 84 ஓட்டங்களைக் குவித்தார்.
162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தெரிவு செய்யப்பட்டார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் முறியடித்தார். சூர்யகுமார் இதுவரை 17 முறை இவ்விருதினை வென்று முதலிடத்தில் உள்ளதுடன், விராட் கோலி 16 விருதுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
