வியட்நாமில் யாகி சூறாவளியின் தாக்கம் காரணமாக இதுவரை 200 பேர் பலி

வியட்நாமில் யாகி சூறாவளிக்குப் பின்னர்; சுமார் 200 பேர் மரணமடைந்துள்ளனர் மற்றும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 125 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று மாநில ஊடகங்கள் இன்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

வியட்நாமின் செய்தித்தாள் ஒன்று வெளயிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 197 பேர் இறந்துள்ளதாகவும், 128 பேர் இன்னும் காணவில்லை என்றும், 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

தலைநகரில், சிவப்பு ஆற்றில் இருந்து வெள்ள நீர் சிறிது குறைந்தாலும் பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாட்டை தாக்கிய மிக வலிமையான புயல் யாகி. இது 149 கிமீ (92 மைல்) வேகத்தில் காற்றுடன் சனிக்கிழமை கரையைக் கடந்தது. ஞாயிற்றுக்கிழமை வலுவிழந்த போதிலும், மழை தொடர்ந்து பெய்தது மற்றும் ஆறுகள் ஆபத்தான நிலையில் உள்ளன.

கடந்த செவ்வாயன்று வடக்கு வியட்நாமின் லாவோ காய் மாகாணத்தில் உள்ள லாங் நுவின் முழு குக்கிராமத்தையும் திடீர் வெள்ளம் அடித்துச் சென்றதால், வாரத்தின் தொடக்கத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது.

நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் புதன்கிழமை உயிர் பிழைத்தவர்களைத் தேட அயராது உழைத்தனர், ஆனால் வியாழன் காலை நிலவரப்படி 53 கிராமவாசிகள் காணாமல் போயுள்ளனர், மேலும் ஏழு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது என்று தெரிவித்துள்ளது.