விமான நிலையத்தில் ரூ.16.84 மில்லியன் மதிப்புள்ள பாரிய போதைப்பொருள் பறிமுதல்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ரூ.16.84 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” மற்றும் “ஹாஷிஷ்” போதைப்பொருட்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வருகை முனையத்தில் உள்ள பொதிகளை பெற்றுக்கொள்ளும் பகுதி எண் 05 க்கு அருகிலுள்ள ஆண்கள் கழிப்பறையில் 422 கிராம் “குஷ்” மற்றும் 1.262 கிலோகிராம் “ஹாஷிஷ்” அடங்கிய போதைப்பொருட்கள் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அதிகாலை 1.30 மணியளவில் போதைப்பொருளைக் கண்டுபிடித்த விமான நிலைய ஊழியர் ஒருவர் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குத் தகவல வழங்கியதையடுத்து பொதிகளை பறிமுதல் செய்தனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.